search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோடி தாயார் வயது"

    மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில், மோடியின் தாயார் வயதுபோல் தேய்ந்து வரும் ரூபாய் மதிப்பு என காங்கிரஸ் தலைவர் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    போபால்:

    230 இடங்களை கொண்ட மத்தியப்பிரதேசம் மாநில சட்டசபைக்கு நவம்பர் 28-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பா.ஜ.க. சார்பில் புத்னி தொகுதியில் போட்டியிடுகிறார்.

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதற்கான முன்னோட்டமாக கருதப்படும் இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்து கொள்ள ஆளும் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை கைப்பற்ற எதிர்க்கட்சியான காங்கிரசும் முனைப்பு காட்டி வருகின்றன.

    வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் மற்றும் வேட்பாளர்களின் வாக்கு சேகரிப்பு வேட்டை சூடுபிடித்துள்ளது.

    பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்த மாநிலத்தின் சில தொகுதிகளில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர்.



    இந்நிலையில், ம.பி.யில் இந்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜ்பாப்பர், மோடியின் தாயார் வயதுபோல் ரூபாயின் மதிப்பும் தேய்ந்து வருகிறது என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மபியின் இந்தூர் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்களே, நீங்கள் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னால் இந்திய ரூபாயின் மதிப்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் வயது போல் ரூபாயின் மதிப்பு உள்ளது என தெரிவித்திருந்தீர்கள்.

    ஆனால், தற்போது உங்கள் ஆட்சியில் ரூபாயின் மதிப்பு உங்களது தாயாரின் வயதுபோல் தேய்ந்து வந்துள்ளது என தெரிவித்தார்.

    காங்கிரஸ் தலைவரின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ராஜ் பாப்பரின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என மாநில பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர்.  #MadhyaPradeshAssemblyElections #Congress #ModiMother
    ×